குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர்: ஆக. 18-ல் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை
கூலி ரிலீஸ்... ராமேஸ்வரத்தில் புனித நீராடி வழிபட்ட லோகேஷ் கனகராஜ்!
கூலி திரைப்படம் நாளைமறுநாள் (ஆக. 14) வெளியாகவுள்ள நிலையில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புனித நீராடி சாமி தரிசனம் செய்தார்.
கூலி திரைப்படத்துக்கான புரமோஷன் பணிகள் முடிந்த நிலையில், சாமி தரிசனத்திற்காக ராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் உலகம் முழுவதும் ஆக. 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த் உடன், பான் இந்தியா படம் என்பதற்கேற்ப நாகர்ஜுனா, ஆமீர்கான், உபேந்திரா, செளபின் சாஹிர் என மற்ற மொழி நடிகர்களும் நடித்துள்ளனர்.
லியோ படம் வசூல் ரீதியாக வெற்றியாக இருந்தாலும், கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் கூலி படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இணைய தளங்களில் செய்யப்பட்டுள்ள டிக்கெட் முன்பதிவுகளே இதற்கு சான்றாக உள்ளன.
இப்படத்துக்கான பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியின் விடியோக்கள் நேற்றுமுதல் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. சமூக வலைதளங்களில் கூலி படத்தைப் பற்றிய விடியோக்களும் புகைப்படங்களும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.
இதனிடையே ராமேஸ்வரம் கோயிலில் லோகேஷ் கனகராஜ் சாமி தரிசனம் செய்த விடியோவையும் ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.