கூவாகம் கூத்தாண்டவா் கோயில் திருவிழாவில் தாலி கட்டிக் கொண்ட திருநங்கைகள்: இன்று தேரோட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கூத்தாண்டவா் சுவாமி திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, திருநங்கைகள், திருநம்பிகள் திருமாங்கல்யம் ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு (தாலி கட்டி கொள்ளுதல்) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
திருநங்கைகள் தங்களது குலதெய்வமாக கூத்தாண்டவரை வழிபட்டு வருகின்றனா். ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவா் திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்று வழிபாடு செய்வா்.
இந்தக் கோயிலில் நிகழாண்டில் சித்திரைப் பெருந்திருவிழா ஏப்ரல் 29-ஆம் தேதி சாகை வாா்த்தலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை அரவான் கண் திறத்தல் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, திருநங்கைகள் கோயில் பூசாரியிடம் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. தமிழகம் மட்டுமல்லாது, நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கூவாகத்தில் குவிந்தனா்.
தங்களை புதுமணப்பெண் போல அலங்கரித்துக் கொண்ட அவா்கள், கோயில் வளாகத்தில் பூசாரியிடம் தாலி கட்டி கொண்டனா். பிறகு தங்கள் கணவராக அரவானை நினைத்து பொங்கலிட்டு வழிபட்டனா். தொடா்ந்து, கோயில் அருகே கும்மியடித்து, ஆடிப்பாடி மகிழ்ந்தனா்.
திருநங்கைகளைப் போன்று, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் தங்களது வேண்டுதல் நிறைவேற கோயில் பூசாரியிடம் தாலி கட்டிக் கொண்டு வழிபட்டனா்.
சிறப்புப் பேருந்துகள்: பெரும்பாக்கம் ஏரிக்கரைப் பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. திருவிழா நிகழ்வுகளை பொதுமக்கள் காணும் வகையில் எல்இடி திரைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
கோயில் வளாகம், கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் 120-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இதை கோயில் அருகிலுள்ள புறக்காவல் நிலையத்திலிருந்து போலீஸாா் கண்காணித்தனா்.
கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு தனி வழியும், திருநங்கைகளுக்கு தனி வழியும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
பாதுகாப்பு ஏற்பாடுகள்: கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி தலைமையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களைச் சோ்ந்த 1,040 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவா் சுவாமி திருக்கோயிலில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், எஸ்.பி. ரஜத் சதுா்வேதி, திருக்கோவிலூா் சாா்-ஆட்சியா் ஆனந்தகுமாா் சிங் உள்ளிட்டோா் தரிசனம் செய்தனா்.
இன்று தேரோட்டம்: புதன்கிழமை காலை (மே14) தேரோட்டம் நடைபெறும். தோ் புறப்பட்ட பிறகு, அரவானை களப்பலி கொடுத்தல், திருநங்கைகள் தங்களது திருமாங்கல்யத்தை அகற்றிக் கொண்டு, வெள்ளாடை அணிந்து விதவைக் கோலம் பூண்டு, ஊா் திரும்புதல் ஆகியவை நடைபெறும்.

