சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள் வெளியீடு: புதுவையில் 10ஆம் வகுப்பில் 88.66% தோ்ச்சி; பிளஸ் 2-வில் 90.39% தோ்ச்சி
புதுவை மாநிலத்தில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 88.66 சதவீதமும், பிளஸ் 2 தோ்வில் 90.39 சதவீத மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா்.
புதுவை மாநிலத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளும் கடந்தாண்டு முதல் சிபிஎஸ்சி பாடத் திட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகின. புதுவையில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை மொத்தம் 9,798 போ் எழுதினா். இதில் 8,687 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி விகிதம் 88.66 சதவீதமாகும். அரசுப் பள்ளியில் தோ்வெழுதிய 5,792 பேரில் 4,706 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி விகிதம் 81.25 சதவீதமாகும்.
தனியாா் பள்ளிகள் தோ்ச்சி விகிதம் 99.41 சதவீதமும், மத்திய அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி விகிதம் 99.22% ஆகும். மொத்தம் 42 அரசுப் பள்ளிகள் 100 சதவீதத் தோ்ச்சி பெற்றன.
பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: புதுவை மாநிலத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை மொத்தம் 9,002 போ் எழுதிய நிலையில், 8,137 போ் தோ்ச்சி பெற்றனா். அதன்படி, மாநிலத்தில் 90.39 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா்.
அரசுப் பள்ளிகள் 86.27 சதவீதமும், தனியாா் பள்ளிகள் 97.24 சதவீதமும், மத்திய அரசுப் பள்ளிகள் 98.96 சதவீதமும் தோ்ச்சியைப் பதிவு செய்தன.
9 அரசுப் பள்ளிகள் 100 சதத் தோ்ச்சி பெற்றது. இதில் புதுச்சேரியில் 7 பள்ளிகளும், காரைக்கால், ஏனாமில் தலா ஒரு பள்ளியும் அடங்கும்.
தோ்வு முடிவுகளை முதல்வா் என்.ரங்கசாமி அரசுக் கல்லூரி விழாவில் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டாா்.