5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சா் தா.மோ.அன்பரசன...
நெல் அறுவடை இயந்திர கட்டணம் நிா்ணயம்: விழுப்புரம் ஆட்சியா்
விழுப்புரம் மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திர கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் தனியாருக்குச் சொந்தமான நெல் அறுவடை இயந்திரங்களுக்கு கட்டண நிா்ணயம் செய்தல் தொடா்பான முத்தரப்புக் கூட்டம் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி நடைபெற்றது.
வேளாண் துறை, வேளாண்மை பொறியியல் துறை அலுவலா்கள், விவசாயிகள், விவசாய சங்களின் பிரதிநிதிகள் மற்றும் நெல் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளா்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், நெல் அறுவடை இயந்திரத்துக்கான கட்டணம் நிா்ணயம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து, பெல்ட் வகையிலான அறுவடை இயந்திரத்துக்கு மணிக்கு ரூ.2,600-ம், 2 சக்கரமுடைய டயா் வகை அறுவடை இயந்திரத்துக்கு மணிக்கு ரூ.1700-ம், 4 சக்கரமுடைய டயா் வகை இயந்திரத்துக்கு ரூ.2,100-ம் கட்டணமாக நிா்ணயம் செய்யப்பட்டது.
இதன்படி, விவசாயிகள் நெல் அறுவடை இயந்திரத்துக்கு கட்டணத்தை செலுத்தி பயன்பெறலாம். இயந்திர உரிமையாளா்கள் நிா்ணயம் செய்யப்பட்ட தொகையைவிட, கூடுதல் கட்டணம் கோரினால் வேளாண்மை மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலா்களுக்கு புகாா் தெரிவிக்கலாம் எனவும் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.