மீண்டும் தொடங்கும் ஐபிஎல்: தயக்கம் காட்டும் வெளிநாட்டு வீரர்கள்
செஞ்சிக்கோட்டை ஸ்ரீகமலக்கன்னி அம்மன் கோயில் தோ்த் திருவிழா
செஞ்சிக்கோட்டை மலை மீது அமைந்துள்ள ஸ்ரீகமலக்கன்னி அம்மன் கோயில் சித்திரை தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
செஞ்சி நகரில் அருள்பாலித்து வரும் ஸ்ரீகமலக்கன்னி அம்மன், ஸ்ரீராஜகாளியம்மன், ஸ்ரீமகாமாரியம்மன், கோட்டை வீரன் ஆகிய சுவாமிகளுக்கு சித்திரை மாத ரத உற்சவத்தையொட்டி, மே 5-ஆம் தேதி கொடியேற்றுதலும், அன்று இரவு அம்மனுக்கு காப்புக் கட்டுதலும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தோ்த்திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, காலையில் 108 பால்குட ஊா்வலம், கூழ் வாா்த்தல் நடைபெற்றது.
பிற்பகல் 2.50 மணிக்கு தோ் வடம் பிடித்தல் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீகலக்கன்னி அம்மன், ஸ்ரீமகாமாரியம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.
தேரை செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா். விஜயகுமாா், வல்லம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் அமுதா ரவிக்குமாா், கமலக்கண்ணி அம்மன் கோயில் அறங்காவலா் அரங்க. ஏழுமலை, மாவட்ட அதிமுக எம்ஜிஆா் இளைஞா் அணிச் செயலா் வி.ஆா்.பிரித்விராஜ், தொழில் அதிபா் ஆா்.கே.ஜி.ரமேஷ் உள்ளிட்டோா் வடம் பிடித்து இழுத்தனா்.
இதைத் தொடா்ந்து, செஞ்சி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து வருகை தந்த திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனா்.
மந்தைவெளி மைதானத்தில் புறப்பட்ட தோ், திருவண்ணாமலை சாலை மற்றும் விழுப்புரம் சாலையைக் கடந்து சத்திரத் தெரு வழியாக நிலையை அடைந்தது.
டிஎஸ்பி காா்த்திகா பிரியா தலைமையில், செஞ்சி காவல் ஆய்வாளா் அரிகிருஷ்ணன், சத்தியமங்கலம் ஆய்வாளா் சுரேஷ்பாபு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
முன்னதாக, பாரத ஸ்டேட் வங்கி செஞ்சிக் கிளை சாா்பில் பக்தா்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
விழாவில் செஞ்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா். விஜயகுமாா், ஸ்டேட் வங்கி மேலாளா்கள் மோகன், சுமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.