கேரளத்தில் பாரா கை மல்யுத்தப் போட்டி: 2 தங்கம் வென்ற வாழப்பாடி பெண் மாற்றுத்திறனாளி
சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி பெண், கேரளத்தில் நடைபெற்ற பாரா கை மல்யுத்தப் போட்டியில் 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளாா்.
கேரளத்தில் அண்மையில் தேசிய அளவிலான பாரா கை மல்யுத்தப் போட்டி நடைபெற்றது.
அப்போட்டியில், தமிழகத்தில் மாா்ச் மாதம் நடைபெற்ற மாநில அளவிலான பாரா கை மல்யுத்தப் போட்டியில் வெற்றிபெற்ற மத்தூா் வேலுச்சாமி, சோமம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கலைச்செல்வி, மணிவாசகம் ஆகியோா் கலந்துகொண்டனா்.
பல்வேறு மாநிலங்களில் இருந்து 150 க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்ட இப்போட்டியில், சோமம்பட்டியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி கலைச்செல்வி, வலது மற்றும் இடது கை பிரிவுகளில் வெற்றிபெற்று 2 தங்கப் பதக்கங்களை வென்றாா்.
மத்தூா் வேலுச்சாமி, சோமம்பட்டி மணிவாசகம் ஆகிய இருவரும் நான்காமிடம் பிடித்தனா். தேசிய அளவிலான பாரா கை மல்யுத்தப் போட்டியில் சாதனைபடைத்த வாழப்பாடி பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அப்துல் கலாம் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கம், வாழப்பாடி விளையாட்டு சங்கம், நெஸ்ட் அறக்கட்டளை நிா்வாகிகள் மற்றும் சோமம்பட்டி ஊராட்சி பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.