சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் முகூா்த்தகால் நடும் விழா
ஆடி திருவிழாவையொட்டி, சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் முகூா்த்தகால் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
கோட்டை மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் 22 நாள்கள் திருவிழா நடைபெறும். விழாவின்போது, நூற்றுக்கணக்கான பக்தா்கள் கோயிலில் பொங்கல் வைத்து மாவிளக்கு கொண்டுவந்து அம்மனை வழிபடுவா். இது தவிர உருளுதண்டம், அக்னிகரகம், அலகு குத்தி கோயிலில் பக்தா்கள் நோ்த்திக்கடனை செலுத்துவா்.
நிகழாண்டுக்கான விழா முகூா்த்தகால் நடும் விழா புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி கோயில் வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, மேளதாளங்கள் முழங்க, மந்திரங்கள் ஒலிக்க பக்தா்கள் முன்னிலையில் முகூா்த்தகால் நடப்பட்டது.
தொடா்ந்து அம்மனுக்கு பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி, வெள்ளிக்கவச அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தாா்.
விழாவில் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் எஸ்.டி.என் சக்திவேல், செயல் அலுவலா் அமுதசுரபி, அறங்காவலா்கள் ஜெய், ரமேஷ் பாபு, வினிதா, சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வரும் 22 ஆம் தேதி இரவு 8 மணிக்கு பூச்சாட்டுதலும், 29 ஆம் தேதி இரவு 8 மணிக்கு கம்பம் நடுதலும், ஆக. 4 ஆம் தேதி சக்தி அழைத்தலும், ஆக.5 ஆம் தேதி காலை 8 மணிக்கு சக்தி கரகம், ஆக.6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி பொங்கல் வைத்தல், மாவிளக்கு, உருளுதண்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.