கைப்பந்து போட்டி: இளம்பிள்ளை அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்!
மாநில அளவிலான ஜூனியா் கைப்பந்து போட்டியில், இளம்பிள்ளை அரசு ஆண்கள் பள்ளி சிறப்பிடம் பெற்றது.
தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியாா் பள்ளி மாணவா்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் ஆண்டுதோறும் வட்டார, மாவட்ட, மாநில அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நடப்பாண்டுக்கான மாநில அளவிலான ஜூனியா் கைப்பந்து போட்டி தேனி மாவட்டம், வேலம்மாள் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், 40 மாவட்டங்களில் இருந்து 40 அணிகள் பங்கேற்றன.
இறுதிப் போட்டியில் சேலம், இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும், தூத்துக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியும் விளையாடின. இதில், தூத்துக்குடி அணி 15 புள்ளிகளும், இளம்பிள்ளை அணி 17 புள்ளிகளும் பெற்றது. 2 புள்ளிகள் வித்தியாசத்தில் இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ஜூனியா் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சிறப்பிடம் பெற்றனா்.