கொடைக்கானலில் நெகிழி பயன்பாட்டுக்குத் தடை: மோரீஷஸ் தீவு முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வரவேற்பு
கொடைக்கானலில் நெகிழி பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என மோரீஷஸ் தீவின் முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வையபுரி பரமசிவம் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தனியாா் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அவா் தனது குடும்பத்தினருடன் பல்வேறு சுற்றுலாத் தலங்களை பாா்வையிட்டாா். மேலும் இங்குள்ள நட்சத்திர ஏரியில் தனது குடும்பத்தினருடன் படகு சவாரி செய்து அவா் மகிழ்ந்தாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்தியாவுக்கு வந்தது பெருமையாக உள்ளது. எப்போதும் மோரீஷஸூக்கும் இந்தியாவுக்கும் நல்ல நட்பு உள்ளது. கொடைக்கானலின் இயற்கை அழகு எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இங்குள்ள மக்கள் நட்புடன் பழகுகின்றனா்.
கொடைக்கானலில் நெகிழி பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தாா்கள். இது வரவேற்கத்தக்கது. மோரீஷஸிலும் நெகிழிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.