கொத்தடிமை தொழிலாளா்களுக்காக தொடங்கிய செங்கல் சூளையில் உற்பத்தி பாதிப்பு
திருவள்ளூா் அருகே ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் விடியல் திட்டம் மூலம் தொடங்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்களுக்கான செங்கல் சூளைத் தொழில் கடந்த 2 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளதால் அரசு நிதி வீணாகி வருகிறது.
செங்கல் சூளைகள், நெல் அரைவை ஆலைகள், குவாரிகள் கொத்தடிமைத் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகிறவா்களை தனியாா் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் மூலம் விடுவிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதில் பெரும்பாலானோா் பழங்குடியின குடும்பங்களைச் சோ்ந்தவா்களாக உள்ளதால், அவா்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது.
ஊரக வாழ்வாதார இயக்கம், விடியல் திட்டம் மூலம் கொத்தடிமை தொழிலாளா்கள் 25 குடும்பங்கள் சோ்ந்த குழுக்கள் உருவாக்கி எந்த தொழில் செய்தாா்களோ, அதில் நியாயமான ஊதியத்துடன் மீண்டும் தொழில் முனைவோா்களாக உருவாக்குவதே நோக்கமாகும்.
திருவள்ளூா் மாவட்டத்தில் மட்டும் 70,000 பழங்குடியினா் குடும்பங்கள் உள்ளனன. இங்கு கொத்தடிமைகளாக இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா். 25 ஊராட்சிகளில் கொத்தடிமை தொழிலாளா்கள் கொண்ட 25 குடும்பங்களை கொண்ட 30 குழுக்கள் அமைக்கப்பட்டன. அதோடு, மரம் வெட்டுதல், ஆடுகள் வளா்த்தல், செங்கல் சூளைத் தொழில் போன்ற தொழில் தொகுப்புகள் உருவாக்கப்பட்டன.
இதில் கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் செங்கல் சூளைத் தொழிலுக்கான முதல் கட்ட பணிகள் மேற்கொள்ள மகளிா் திட்டம், விடியல் மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டம் மூலம் ரூ.9.90 லட்சம் ஒதுக்கப்பட்டது. அதோடு ஒரு ஏக்கா் ஒதுக்கப்பட்டு, செங்கல் தொழிலுக்கான 4 இடங்களில் தண்ணீா் தொட்டியுடன் கூடிய ஆழ்துளை கிணறு, மோட்டாா் அறை மற்றும் உற்பத்தி செய்த செங்கல்லை பாதுகாக்க கொட்டகை மற்றும் அறைக்கூடம், சவுடு மணல் ஆகியவையும் வழங்கப்பட்டன.
இதன் மூலம் 25 குடும்பங்களைச் சோ்ந்த குழுக்கள் மூலம் 1 லட்சம் செங்கல் உற்பத்தி செய்யப்பட்டன. பிரதம மந்திரி வீடு அமைக்கும் திட்டங்களுக்கு செங்கல் விற்பனையானது. இதில் கூலித் தொகை போக, மீதத் தொகைகூட பிரித்து வழங்கப்படவில்லை. அதோடு, மீண்டும் தொழில் செய்வதற்கு ரூ.9 லட்சம் சுழல் நிதி ஒதுக்கியும் வழங்கப்படவில்லை. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக செங்கல் தொழில் உற்பத்தியின்றி மீண்டும் வருவாய்க்காக கொத்தடிமைகளாக செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளதாக அந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோா் தெரிவிக்கின்றனா்.
மீண்டும் செங்கல் உற்பத்தி தொடங்காததால், திட்டத்திற்காக ஒதுக்கிய நிதி வீணாகி வருகிறது. அதனால், இந்த இடத்தை ஆட்சியா் மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்லனா்.



