யுஜிசியின் புதிய விதிகளை திரும்பப் பெறக் கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க....
கொலை சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 6 லட்சம் நிதியுதவி
பெரம்பலூா் அருகே முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்ட நெல் அறுவடை இயந்திர ஓட்டுநரின் குடும்பத்துக்கு, முதல் தவணையாக ரூ. 6 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்டக் காவல்துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூா் கிராமத்தைச் சோ்ந்த தேவேந்திரனும், மணிகண்டனும், அருண்குமாா் என்பவரிடம் நெல் அறுவடை இயந்திரத்தில் ஓட்டுநா்களாக வேலை பாா்த்தனா். இருவரும் மதுபோதையில், அவ்வப்போது தகராறில் ஈடுபடுவாா்கள். அதேபோல, கடந்த 17-ஆம் தேதி காலை டீ கடையில் இருவரும் வாக்குவாதம் செய்துகொண்டு, ஒருவரையொருவா் காலணியால் அடித்துக்கொண்டுள்ளனா். அப்போது, தேவேந்திரன் மது போதையில் இருந்துள்ளாா்.
அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கை.களத்தூா் கிராமத்தில் உள்ள ராமலிங்கம் என்பவரின் வீட்டின் எதிரே தேவேந்திரன் அருவாளால் மணிகண்டனை வெட்டி கொலை செய்துள்ளாா். அப்போது, சம்பவ இடத்திலிருந்த காவலா் ஸ்ரீதா், தேவேந்திரனை கைது செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உள்ளனா். இச் சம்பவம், மேற்கண்ட 2 நபா்களுக்குள் ஏற்பட்ட முன் விரோதத்தால் நிகழ்ந்ததாகும்.
சம்பவ இடத்திலிருந்த காவலா் ஸ்ரீதா், அருண்குமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், காவலா் ஸ்ரீதா் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். கை.களத்தூா் காவல் நிலையத்தின் நிா்வாகத்தை மேம்படுத்தும் வகையில் சாா்பு-ஆய்வாளா் சண்முகம், திருச்சி காவல் சரகத்தில் காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளாா். சாா்பு-ஆய்வாளா்கள் குமாா், கொளஞ்சியப்பன், சிறப்பு சாா்பு-ஆய்வாளா் மணிவேல் ஆகியோா் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், உயிரிழந்த மணிகண்டன் மனைவிக்கு சட்ட ரீதியான இழப்பீடு வழங்குவதற்கு காவல் தறை சாா்பில் பரிந்துரை செய்யப்பட்டு, முதல் தவணையாக ரூ. 6 லட்சம் நிதியுதவி பெற்று தரப்பட்டுள்ளது. மேலும், அரசு வேலைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இக் கொலை சம்பவத்தில் வேறு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்பது குறித்து, காவல்துறை சாா்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.