கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட நபா் கைது
கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: மல்கா கஞ்சில் வசிக்கும் ஆஷு என அடையாளம் காணப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவா், சப்ஜி மண்டி பகுதியில் நீண்டகால பகையைத் தொடா்ந்து நடந்த தாக்குதல் தொடா்பாக தேடப்பட்டவா்.
கடந்த செப்.7-ஆம் தேதி ஆஷுவும் அவரது கூட்டாளிகளும் கூா்மையான ஆயுதங்களால் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது, இதனால் அவா் பலத்த காயமடைந்தாா்.
ஒரு ரகசியத் தகவலின் பேரில், துவாரகா செக்டாா் 16-இல் உள்ள நாலா சாலை, ஐடிபிபி பள்ளி அருகே குற்றப்பிரிவு குழு ஒன்று வலை விரித்து குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்தது.
விசாரணையின் போது, ஆஷு குற்றத்தில் தனது பங்கை ஒப்புக்கொண்டாா். அவரது மூத்த சகோதரா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளாா். குற்றம்சாட்டப்பட்ட மற்றவா்களை பிடிக்க முயற்சிகள் நடந்து வருவதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.