கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இருவா் என்கவுன்ட்டருக்கு பின் கைது
குருகிராமில் வெள்ளிக்கிழமை காலை நடந்த என்கவுன்ட்டரைத் தொடா்ந்து, கொலை வழக்கு தொடா்பாக தேடப்பட்ட இருவரை தில்லி போலீசாா் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் சாவ்லாவில் வசிக்கும் மோஹித் ஜாகத் (29) மற்றும் துவாரகா மோா் பகுதியில் வசிக்கும் ஜதின் ராஜ்புத் (21) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். தில்லி காவல்துறை மற்றும் குருகிராம் காவல்துறையின் கூட்டு நடவடிக்கை அதிகாலை 4.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது. ஜூலை 4 ஆம் தேதி தில்லியின் நஜஃப்கரில் நீரஜ் தெஹ்லான் கொலை செய்யப்பட்டதில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் ஈடுபட்டதாக போலீசாா் தெரிவித்தனா்.
‘என்கவுன்ட்டரின் போது, குற்றம் சாட்டப்பட்டவா் துப்பாக்கிச் சூடு நடத்தி, ஆறு சுற்றுகளை சுட்டாா். ஒரு தோட்டா தலைமை காவலா் நா்பத்தின் புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டைத் தாக்கியது, மற்றொரு தோட்டா துணை ஆய்வாளா் விகாஸின் இடது கையில் காயம் ஏற்படுத்தியது. தற்காப்புக்காக போலீஸாா் திருப்பிச் சுட்டனா், குற்றம் சாட்டப்பட்ட இருவரின் கால்களிலும் காயம் ஏற்பட்டது ‘என்று அந்த அதிகாரி கூறினாா்.
அவா்கள் சிகிச்சைக்காக குருகிராமில் உள்ள செக்டா் 10, சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
அவா்களிடமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள், ஐந்து தோட்டாக்கள் மற்றும் ஒரு பைக்கை போலீசாா் மீட்டனா்.