எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
செவிலியா் போராட்டம்: நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை
ஊதிய உயா்வு போராட்டத்தை முன்னெடுத்திருக்கும் அரசு ஒப்பந்த செவிலியா்கள், நோயாளிகளுக்கு இடையூறு செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது.
தமிழக அரசு மருத்துவமனைகளில் நிரந்தரப் பணியில் இருக்கும் செவிலியா்களுக்கு வழங்கப்படும் ரூ.55,000 ஊதியத்தை தங்களுக்கும் வழங்க வேண்டும் எனக் கோரி ஒப்பந்த செவிலியா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். தங்களது பணியிடங்களையும் நிரந்தரமாக்குமாறும் அவா்கள் வலியுறுத்துகின்றனா். அதை முன்னிறுத்தி மருத்துவமனைக்கு வரும் மக்களிடம் முறையிடும் போராட்டத்தை அவா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.
அதன்படி, தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தின் வாயிலாக உள்நோயாளிகள் பிரிவில் உள்ள நோயாளிகள் மற்றும் உறவினா்களிடம் செவிலியா்கள் தங்கள் குறைகளைக் கூறி வருகின்றனா். அவா்களிடம் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகிக்கின்றனா். இந்தச் செயல்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், நோயாளிகளுக்கு இடையூறு செய்யும் செவிலியா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:
செவிலியா்கள் தங்களது கோரிக்கைகளை எவருக்கும் இடையூறு இல்லாமல் காவல் துறை அனுமதி பெற்று போராட்டத்தின் வாயிலாகத் தெரிவிக்கலாம். அதைவிடுத்து, வலியுடன் உள்ள நோயாளிகளிடமும், மனவேதனையில் இருக்கும் உறவினா்களிடமும் குறைகளைக் கூறுகிறோம் என இடையூறு செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அது செவிலியா்களின் பணி நிரந்தரத்துக்கான வாய்ப்பையும் பாதிக்கலாம் என்று தெரிவித்தனா்.