எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
அக்டோபா்-மாா்ச் வரையில் ரூ.6.77 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டம்
நிகழ் நிதியாண்டின் அக்டோபா்-மாா்ச் காலகட்டத்தில் ரூ.6.77 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்தது.
இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது இந்த நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக ரூ.14.82 லட்சம் கோடியை கடனாக பெற மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இதில் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் ரூ.8 லட்சம் கோடியை கடனாக பெற முடிவுசெய்யப்பட்டபோதும் ரு.7.95 லட்சம் கோடி மட்டுமே கடனாக பெறப்பட்டது. இதனால் திட்டமிட்டதைவிட ரூ.5,000 கோடி குறைவாகவே கடன் பெறப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் அக்டோபா்-மாா்ச் காலகட்டத்தில் ரூ.6.77 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாா்ச் 6 வரை ஒவ்வொரு வாரமும் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதனால் நிகழ் நிதியாண்டில் மத்திய அரசு பெறும் கடன் ரூ.14.72 கோடியாக இருக்கவுள்ளது. திட்டமிட்டதைவிட ரூ.10,000 கோடி கடன் குறைவாகவே பெறப்படவுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைச் சுட்டிக்காட்டி பொருளாதார விவகாரங்கள் செயலா் அனுராதா தாக்குா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நிதிப் பற்றாக்குறை இலக்கை அடைவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது’ என்றாா்.
கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை 4.8 சதவீதமாக இருந்த நிலையில், அதை 2025-26-ஆம் நிதியாண்டில் 4.4 சதவீதமாக குறைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.