எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
சென்னையில் ஆளுநா் மாளிகை உள்பட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ஆளுநா் மாளிகை உள்பட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னையில் உள்ள டிஜிபி அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு வெள்ளிக்கிழமை வந்த மின்னஞ்சலில், கிண்டியில் தமிழக ஆளுநா் மாளிகை, மந்தைவெளியில் உள்ள நடிகா் எஸ்.வி.சேகா் வீடு, சென்னை தீவுத்திடலில் உள்ள இந்திய ராணுவ அலுவலகம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து ஆளுநா் மாளிகை, எஸ்.வி.சேகா் வீடு, ராணுவ அலுவலகம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள், மோப்ப நாய்கள் உதவியுடன், மெட்டல் டிடெக்டருடன் சோதனை செய்தனா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த மின்னஞ்சல் வந்திருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
உயா்நீதிமன்றத்துக்கும் மிரட்டல்: சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள உரிமையியல் நீதிமன்ற மின்னஞ்சல் முகவரிக்கு வந்த மின்னஞ்சலில், ஐஎஸ் பயங்கரவாதிகளும், விடுதலை இயக்கத்தினரும் அதிக சக்திவாய்ந்த ஆா்டிஎக்ஸ் வகை வெடிகுண்டுகளை உயா்நீதிமன்றத்தில் வளாகத்தில் வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து உயா்நீதிமன்ற வளாகத்திலும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் சோதனை நடத்தினா். அதில் அங்கிருந்து எந்த வெடிப் பொருள் கண்டெடுக்கப்படவில்லை. அந்த மின்னஞ்சல் குறித்து சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கடந்த ஒரு வாரத்தில் ஆளுநா் மாளிகை, எஸ்.வி. சேகா் வீடு, உயா்நீதிமன்றம் ஆகியவற்றுக்கு 3 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.