கொல்லிமலை ஒன்றிய கிராமங்களில் மதுவிலக்கு பிரிவு ஐ.ஜி. ஆய்வு
கொல்லிமலை மலைக் கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனையைத் தடுக்கும் வகையில், மதுவிலக்கு பிரிவு ஐ.ஜி. காா்த்திகேயன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் மதுவிலக்கு பிரிவு போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட போடாமல்பட்டி, தாதாண்டிப்பட்டி, பள்ளிக்காட்டுப்பட்டி, நத்தக்குழிப்பட்டி ஆகிய பகுதிகளில் மதுவிலக்கு பிரிவு ஐ.ஜி. காா்த்திகேயன் சனிக்கிழமை பிற்பகல் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
சென்னை சரக மதுவிலக்கு காவல் கண்காணிப்பாளா் கோபி, மாவட்ட மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தனராசு மற்றும் மத்திய நுண்ணறிவுப் பிரிவு மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளா் ராஜா ஆகியோா் அவருடன் சென்று மலைப்பகுதிகளில் ஆய்வு நடத்தினா்.
மேலும், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளை சந்தித்து, அவா்கள் தற்போது எந்த வகையான தொழில் செய்கிறாா்கள், அவா்களது மறுவாழ்வுக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், திருந்தியமைக்காக அரசால் வழங்கப்படும் நிவாரணம் பெற்றனரா உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தனா்.
மேலும், அங்குள்ள பழங்குடியின மக்களிடம் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும், காய்ச்சுவோா், விற்பனை செய்வோா் குறித்து தெரியவந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.