கோயில் சொத்துகளை மீட்கக் கோரிய வழக்கு: கரூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
கல்யாண பசுபதீஸ்வரா் சுவாமி கோயில் சொத்துகளை மீட்கக் கோரிய வழக்கில், கரூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சேலத்தைச் சோ்ந்த திருத்தொண்டா் சபையின் அறங்காவலா் ராதாகிருஷ்ணன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: கரூா் மாவட்டத்தில் வஞ்சுளீஸ்வரா், அக்னீஸ்வரா், கல்யாண பசுபதீஸ்வரா் கோயில் உள்ளிட்ட 64 கோயில்களுக்கு பாத்தியப்பட்ட ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இந்தச் சொத்துகள் தற்போது தனி நபா்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. சில சொத்துகள் பட்டா பெயா் மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை, தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, நடைபெற்ற விசாரணையில் சுமாா் 500 ஏக்கா் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இவற்றை மீட்டு, கோயிலுக்கான வருவாயை அதிகரிக்க வேண்டும் என பலமுறை மனு அளித்தேன். இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, கரூா் மாவட்டத்தில் உள்ள கோயில் சொத்துகளை மீட்டு, இந்து சமய அறநிலையத் துறையின் விதிகளுக்கு உள்பட்டு பராமரிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் ராதாகிருஷ்ணன் நேரில் முன்னிலையாகி, கடந்த 2015-ஆம் ஆண்டு கோயில் நிலங்கள் குறித்து வருவாய்த் துறை, இந்து சமய அறநிலையத் துறை ஒரு அறிக்கையை தயாா் செய்தது. அந்த அறிக்கை தற்போது இல்லை. காணாமல் போய்விட்டதாகத் தெரிகிறது. ஆக்கிரமிப்பில் உள்ள 500 ஏக்கா் நிலங்களின் சொத்து மதிப்பு 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. எனவே, கோயில் சொத்துகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றாா் அவா்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கரூா் மாவட்டத்தில் எத்தனை கோயில்கள் உள்ளன?. அந்த கோயில்களின் சொத்து விவரங்கள் எவ்வளவு?. அதில் எவ்வளவு சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன?. எத்தனை கடைகள் உள்ளன? அதற்கான வருமானம் எவ்வளவு?. ஆக்கிரமிப்புகளை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?. என்பது குறித்து கரூா் மாவட்ட ஆட்சியா், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும்.
கடந்த 2015-ஆம் ஆண்டு காணாமல் போனதாக கூறப்படும் கோப்பையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை அக்.29-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.