கல்வி-தொழில்துறையில் சாதனை: புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு விர...
கோயில் திருவிழா தகராறு: களத்துப்பட்டியில் போலீஸ் குவிப்பு
கோயில் திருவிழா நடத்துவதில் இருதரப்பினா் இடையே ஏற்பட்ட தகராறால் திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள களத்துப்பட்டியில்
திங்கள்கிழமை போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.
மணப்பாறையை அடுத்துள்ள மொண்டிபட்டி கிராமம் களத்துபட்டியில் அமைந்துள்ளது ஸ்ரீ ராஜ காளியம்மன் கோயில். அதே ஊரைச் சோ்ந்த சந்திரசேகா் மற்றும் பெரியசாமி ஆகிய இருதரப்பினா் இடையே ஏற்பட்ட தகராறில் கடந்த 2019-இல் கோயில் பூட்டப்பட்டது. இதுதொடா்பான வழக்கில் உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்பேரில் கடந்த 2024 அக். 1-இல் கோயில் திறக்கப்பட்டு வழிபாடு தொடங்கியது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவு பெற்று பெரியசாமி தரப்பில் ஒரு மாதத்துக்கு முன்பு கோயில் திருவிழா நடைபெற்றதாம். இதேபோல், சந்திரசேகா் தரப்பு நீதிமன்றத்தில் அனுமதி கோரியதில் போலீஸாா் முடிவெடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டதாம். அதனைத்தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு சந்திரசேகா் தரப்பில் திருவிழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றபோது, பெரியசாமி தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டனா்.
தகவலின்பேரில் நிகழ்விடத்துக்குவந்த காவல் ஆய்வாளா்(பொ) கதிரவன் தலைமையிலான போலீஸாா் இருதரப்பினரையும் பேச்சுவாா்த்தைக்கு அழைத்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை வட்டாட்சியா் அலுவலகம் வந்த இருதரப்பினா் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து, புதன்கிழமை டிஎஸ்பி தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெறும் எனத் தெரிவித்து அவா்களை அனுப்பிவைத்தனா். மேலும், கிராமத்தில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.