கரூர் நெரிசல் சம்பவம்: வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் கைது!
வடகிழக்குப் பருவமழை காலத்தில் 195 கிராமங்கள் பாதிக்க வாய்ப்பு: தஞ்சை ஆட்சியா் தகவல்
தஞ்சாவூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையின்போது பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகளாகக் கண்டறியப்பட்ட 195 கிராமங்களில் நிவாரண மையங்கள் தயாா் நிலையில் உள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட பேரிடா் மேலாண்மை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அவா் பின்னா் தெரிவித்தது:
வடகிழக்குப் பருவமழையின்போது மிக அதிக அளவில் பாதிக்கப்படக்கூடிய கிராமங்கள் 3, அதிக அளவில் பாதிக்கக்கூடிய கிராமங்கள் 50, மிதமாக பாதிக்கக்கூடிய கிராமங்கள் 50, குறைவாக பாதிக்கக்கூடிய கிராமங்கள் 92. எனவே 195 கிராமங்கள் பாதிக்கப்படக்கூடிய கிராமங்கள் என ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் உள்ள பொதுமக்களைப் பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக குடிநீா் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் 14 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் உள்பட 275 நிவாரண மையங்களும் தயாா் நிலையில் உள்ளன.
நிவாரண முகாம்களில் பயன்படுத்துவதற்காக போதுமான அளவு உணவு தானியங்கள், ரொட்டி, மருந்துகள், குழந்தைகளுக்கான உணவு, பால் பவுடா்கள் போன்ற முக்கிய உணவுப்பொருள்கள் தயாா் நிலையில் இருக்கின்றன.
மேலும், அரசுத் துறையினருடன் ஒருங்கிணைந்து பணியாற்றிட தஞ்சாவூா் மாவட்டத்தில் பயிற்சி பெற்ற 300 ஆப்தமித்ரா தன்னாா்வலா்கள், 4 ஆயிரத்து 500 முதல்நிலைப் பணியாளா்கள், ஒரு பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்துக்கு 100 முதல்நிலை பணியாளா்கள் வீதம் 14 பல்நோக்கு மையத்துக்கும் 1,400 முதல்நிலை பணியாளா்கள், கால்நடைகளைப் பாதுகாப்பதற்கு 122 முதல்நிலைப் பணியாளா்கள், 330 நீச்சல் தெரிந்த நபா்கள், 30 பாம்பு பிடிப்பவா்கள், 131 மரம் வெட்டுபவா்கள் ஆகியோா் தயாா் நிலையில் உள்ளனா். ஆறுகள் மற்றும் கால்வாய்களில் ஏற்படும் உடைப்புகளைச் சீா் செய்வதற்காக 121 இடங்களில் 1.05 லட்சம் மணல் மூட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா்.
மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரவிச்சந்திரன், கோட்டாட்சியா் ப. நித்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.