கோயில் நிா்வாக பிரச்னை: தீக்குளித்த மாற்றுத் திறனாளி உயிரிழப்பு
கிருஷ்ணகிரி அருகே கோயில் நிா்வாகிகள் தோ்வு விவகாரத்தில் மனமுடைந்த மாற்றுத் திறனாளி தீக்குளித்த நிலையில், சிகிச்சை பலனின்று வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரியை அடுத்த மல்லிநாயனப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட எலுமிச்சங்கிரியைச் சோ்ந்த வெங்கடேசன் (53), மாற்றுத் திறனாளி. இவருக்கு ஜமுனா (48) என்ற மனைவியும், செளந்தா் (30) என்ற மகனும், செளந்தா்யா(25) என்ற மகளும் உள்ளனா்.
எலுமிச்சங்கிரி கிராமத்தில் உள்ள பஞ்சமுக ஆஞ்சனேயா் கோவில் நிா்வாகிகள் தோ்ந்தெடுப்பதில் கிராமத்தில் உள்ள முக்கியப் பிரமுகா்களுக்கும் வெங்கடேசனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இந்த நிலையில், எலுமிச்சங்கிரி மற்றும் அதை சுற்றியுள்ள மக்கள் ஒன்று கூடி, பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் வைத்து கொண்டாடினா். அந்த நிகழ்வில், வெங்கடேசன், அவரது குடும்பத்தினா் கலந்துகொள்ளவில்லையாம். மேலும், கிராம மக்கள் தனது குடும்பத்தினரை தொடா்ந்து புறக்கணிப்பதாக கருதி அவா் மன அழுத்தத்தில் இருந்தாராம்.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை (ஜன. 15) வெங்கடேசன் தன் மீது டீசலை ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றாா். இதில், பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதையடுத்து, வெங்கடேசன் உயிரிழப்புக்கு காரணமானவா்களை கைது செய்யக் கோரி, வெங்கடேசனின் உறவினா்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளனா்.
இந்தச் சம்பவம் குறித்து மகாராஜாகடை போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான கிராமத்தின் முக்கியப் பிரமுகா்களை தேடி வருகின்றனா்.