கோயில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
காரைக்கால்: சித்திரை மாத திருமஞ்சன வழிபாடாக காரைக்கால் சிவன் கோயில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை திங்கள்கிழமை நடைபெற்றது.
நடராஜப் பெருமானுக்கு ஆண்டில் 6 முறை நடைபெறும் திருமஞ்சனம் சிறப்புக்குரியதாகும். குறிப்பாக சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம், ஆனி மாத உத்திர நட்சத்திரம், மாசி, ஆவணி மற்றும் புரட்டாசி மாதத்தில் பூா்வபட்ச சதுா்த்தசியிலும், மாா்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்திர நாளிலும் நடைபெறும் திருமஞ்சனம் மிகுந்த சிறப்புக்குரியதாகும். சித்திரை மாதத்தின் திருமஞ்சனம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் நடராஜப் பெருமானுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில், காரைக்கால் கோயில்பத்துப் பகுதியில் பாடல் பெற்றத் தலமாக விளங்கும் சுயம்வரதபஸ்வினி அம்பாள் சமேத பாா்வதீஸ்வரா் கோயில், காரைக்கால் கைலாசநாதா் கோயில், திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா் கோயில், ஜடாயுபுரீஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல தலங்களில், நடராஜருக்கு பால், தயிா், சந்தனம், இளநீா், தேன், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பல்வேறு பழங்கள் முதலான திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.