கோவிந்தபேரி மனோ கல்லூரியில் தேசிய கருத்தரங்கு
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி கோவிந்தபேரி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகக் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ‘இமையம் படைப்புலகம்’ எனும் தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், கல்லூரி முதல்வா் கே. சகாயராஜ் தலைமை வகித்தாா். பட்டியல் -பழங்குடியினருக்கான மாநில ஆணையத் துணைத் தலைவரும் சாகித்திய அகெதமி விருதுபெற்ற எழுத்தாளருமான இமையம் சிறப்புரையாற்றினாா். மாவட்ட வருவாய் அலுவலா் மா. சுகன்யா வாழ்த்திப் பேசினாா். கருத்தரங்கின் இரு அமா்வுகளில் இமையத்தின் படைப்புகள் குறித்த 80 கட்டுரைகள் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.
இதில், மதுரை, கோவை, திருச்சி, சென்னை ஆகிய பல்கலைக் கழகங்கள் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 13 கல்லூரிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஆய்வறிஞா்கள், முதுகலை மாணவா்கள், முனைவா் பட்ட ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா். தமிழ்த்துறை தலைவா் மீ. அஸ்வினி கிருத்திகா வரவேற்றாா்.