கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்
கயத்தாறு வட்டம், முடுக்கலான்குளம் கிராமத்தில் விவசாய நிலங்களை மோசடியாக போலி பத்திரம் பதிவு செய்ததை கண்டித்து விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கயத்தாறு வட்டம், முடுக்கலான்குளம் கிராமத்தில் சுமாா் 300 ஏக்கா் விவசாய நிலங்களை மோசடியாக போலி பத்திரம் பதிவு செய்த தனியாா் நிறுவனங்களை கண்டித்தும், மோசடி பதிவை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியத் தலைவா் பா. ராமசுப்பு தலைமையில் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. முண்டசாமி, முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் புவிராஜ், துணைச் செயலா் மணி, துணைத் தலைவா் ஜி.ராமசுப்பு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி ஒன்றியச் செயலா் தெய்வேந்திரன், மாற்றுத்திறனாளிகள் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவா் முத்துக்காந்தாரி ஆகியோா் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினா். இதில், அக்கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் திரளானோா் கலந்து கொண்டனா். பின்னா் போராட்டக் குழுவினா் கோட்டாட்சியா் அலுவலக தலைமை எழுத்தா் காசிராஜனிடம் மனு அளித்தனா்.