கோவை: குடிபோதையில் ரகளை செய்தவர் பலி; இளைஞர் கைது!
கோவை: கோவை ரயில் நிலையம் அருகே குடிபோதையில் ரகளை செய்தவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை ரயில் நிலையம் அருகே ஸ்டேட் வங்கி சாலையில் உள்ள டீக்கடைக்கு வெளியே 30 வயது இளைஞர் ஒருவர் குடிபோதையில் ரகளை செய்துள்ளார். கால்களில் சாக்குப் பையை மாட்டிக் கொண்டு குதிப்பது, சப்தம் போடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், டீக்கடைக்கு வருபவர்களுக்கு இடையூறு செய்ததால், அந்த கடையில் பணிபுரிந்த அன்வர் உசேன் (வயது 22) என்பவர் குடிபோதையில் பிரச்னை செய்தவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதையும் படிக்க : வள்ளுவர் சிலையைக் காண 3 புதிய படகுகள்: மு.க. ஸ்டாலின்
இந்த வாக்குவாதம் சண்டையாக மாற, குடிபோதையில் இருந்தவரை அன்வர் கீழே தள்ளியுள்ளார். இதில் தலையில் காயமடைந்தவரை மீட்டு அப்பகுதியினர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
இதுகுறித்து புளியங்குளம் கிராம நிர்வாக அலுவலர் சமயந்தி, கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, அன்வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.