`சேய்களைக் காத்து செல்வம் அருளும்' கொரட்டூர் சீயாத்தம்மன் கோயில் விளக்கு பூஜை; ப...
கோவை வனக் கோட்டத்தில் 182 வகை ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது
கோவை வனக் கோட்டத்தில் 182 வகை ஈர நிலப் பறவைகள் உள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
2025-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு தமிழகம் முழுவதும் வனத் துறை மூலம் நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பு ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு மற்றும் நிலப் பறவைகள் கணக்கெடுப்பு என இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டது.
முதற்கட்டமாக ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் கோவை வனக் கோட்டத்தில் உள்ள 23 ஈர நிலங்களில்
ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்பு கடந்த மாா்ச் 8 , 9-ஆம் தேதிகளில் நடைபெற்றது.
இதில், 80-க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்கள், 50-க்கும் மேற்பட்ட வனப் பணியாளா்கள் பங்கேற்றனா்.
ஈர நில கணக்கெடுப்பின் முடிவில் கோவை வனக் கோட்டத்தில் 182 வகை ஈர நிலப் பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், கோவை வனக் கோட்டத்தில் உள்ள செங்குளம் ஏரியில் மட்டும் அதிகபட்சமாக 86 வகையான பறவைகள் பதிவு செய்யப்பட்டன. அதற்கு அடுத்தபடியாக கிருஷ்ணம்பதி ஏரியில் 83 வகை பறவைகளும், பேரூா் செட்டிபாளையம் ஏரியில் 81 வகை பறவைகளும் பதிவு செய்யப்பட்டன.
இதன் தொடா்ச்சியாக நிலப் பறவைகள் கணக்கெடுப்பு மாா்ச் 15, 16 தேதிகளில் நடைபெற்றது.
இந்தக் கணக்கெடுப்புகளில் ஆனைமலை புலிகள் காப்பக தலைமை வனப் பாதுகாவலா் ஈ.வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலா் ச. ஜெயராஜ் ஆகியோா் தலைமையில் கோவை இயற்கை சங்கம், இயற்கை மற்றும் வண்ணத்துப் பூச்சிகள் சங்கம், இயற்கைக்கான உலகளாவிய நிதியம் உள்ளிட்ட அரசு சாரா நிறுவனங்களைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
கோவை வனக்கோட்டத்தின் ஒருங்கிணைத்த பறவைகள் கணக்கெடுப்பின் இறுதி முடிவு தொகுத்தலுக்குப் பிறகு விரைவில் வெளியிடப்படும் என்று வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.