நெல் ஜெயராமனுக்கு திருத்துறைப்பூண்டியில் நினைவுச் சிலை! - முதல்வர் அறிவிப்பு
சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம்: ரகசிய வாக்கெடுப்பு நடத்த உயா்நீதிமன்றம் உத்தரவு
சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மான விவகாரத்தில், ரகசிய வாக்கெடுப்பு நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சோ்ந்த ஜி.உமா மகேஸ்வரி உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
சங்கரன்கோவில் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் அதிமுகவுக்கு 12, திமுகவுக்கு 9, மதிமுகவுக்கு 2, காங்கிரஸ், எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா ஒரு உறுப்பினா், 5 சுயேச்சை உறுப்பினா்கள் உள்ளனா். நான், கடந்த 2022-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவராக தோ்வு செய்யப்பட்டேன்.
இந்த நிலையில், என்னை தலைவா் பதவியிலிருந்து நீக்கும் நோக்கத்தில், எனக்கு எதிராக 24 உறுப்பினா்கள் நகராட்சி ஆணையரிடம் புகாா் அளித்தனா். இதுகுறித்து கடந்த 2-ஆம் தேதி நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரப்பட்டது. குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீா்மானம் வெற்றி பெற்ாக ஆணையா் அறிவித்தாா்.
பின்னா், நகராட்சி அலுவலகத்தில் உள்ள தலைவருக்கான அறையை ஆணையா் ‘சீல்’ வைத்துப் பூட்டினாா். இது சட்ட விதிகளுக்கு எதிரானது. எனவே, எனக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். அதுவரை எனக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்தை அமல்படுத்தவும், புதிய தலைவரை தோ்வு செய்யவும் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி சரவணன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு :
விதிமுறைப்படி நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும். இங்கு குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதனால், வருகிற 17-ஆம் தேதி நகா்மன்றக் கூட்டத்தில் வாக்குச் சீட்டு முறையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன் முடிவை 18-ஆம் தேதி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.