திருவாரூர் மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!
பழைய காகித சேமிப்புக் கிடங்கில் தீ: சரக்கு வாகனங்கள் எரிந்து நாசம்
மதுரை முனிச்சாலை ஓபுளா படித்துறை அருகேயுள்ள பழைய காகித சேமிப்புக் கிடங்கில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சரக்கு வாகனங்கள் எரிந்து நாசமாகின.
முனிச்சாலை வைகையாற்றின் தென்கரை ஓபுளா படித்துறை அருகே தனியாருக்குச் சொந்தமான பழைய காகிதங்கள், நெகிழிப் பொருள்கள் சேமிப்புக் கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில் புதன்கிழமை அதிகாலை புகை வெளிவந்தது. இதையறிந்த அக்கம்பக்கத்தினா் கிடங்கின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த அவா், கிடங்கு உள்ளே பரவிய தீயை அணைக்க முயன்றாா். அதற்குள் தீ மளமளவென கிடங்கு முழுவதும் எரியத் தொடங்கியது.
இதுகுறித்து தகவலறிந்து தல்லாகுளம், திலகா் திடல் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பின் தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள், கிடங்கு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனங்கள் முழுவதும் எரிந்து நாசமாகின.
இந்த விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. அதிக வாகனங்கள் செல்லக் கூடிய பகுதி என்பதால் புதன்கிழமை காலை சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. மேலும், தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்ததால் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில், விளக்குத் தூண் போலீஸாா் வழக்குப் பதிந்து, மின் கசிவால் விபத்து ஏற்பட்டதா? என்பது விசாரித்து வருகின்றனா்.

