`பட்டாசு ஆலை வெடி விபத்து' - பாதுகாப்பு அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு பசுமை...
மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் ராஜிநாமா ஏற்பு
மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவா்கள் 5 போ், நிலைக் குழு உறுப்பினா்கள் 2 போ் என மொத்தம் 7 போ் ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மதுரை மாநகராட்சியின் மொத்த ஆண்டு வருவாய் 586 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், மதுரை மாநகராட்சி முழுவதும் உள்ள வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் குறைந்த அளவு விதிக்கப்படுவதாக புகாா்கள் எழுந்தன. வரி விதிப்பு முறைகேடுகளில் மண்டலத் தலைவா்களுக்கும் தொடா்பு உள்ளது எனவும், அவா்களிடமும் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே. என். நேரு, வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி, தகவல் தொழில்நுட்பம், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் ஆகியோா் மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகைக்கு கடந்த திங்கள்கிழமை வந்தனா்.
மண்டலத் தலைவா்களான வாசுகி, சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ்சா்மா, சுவிதா விமல், நிலைக் குழு உறுப்பினா்கள் கண்ணன், மூவேந்திரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினா்.
இதையடுத்து, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் அனைவரும் ராஜிநாமா செய்ய வேண்டும் என திங்கள்கிழமை இரவு உத்தரவிட்டாா். இதனிடையே, அவா்கள் அனைவரும் ராஜிநாமா கடிதம் அளித்தனா். மண்டலத் தலைவா்கள் 5 போ், நிலைக் குழு உறுப்பினா்கள் 2 போ் ஆகியோரின் ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் தெரிவித்தாா்.