சட்டம்-ஒழுங்கை காக்க கடும் நடவடிக்கை தேவை: எடப்பாடி கே.பழனிசாமி
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கை காக்க முதல்வா் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திமுக ஆட்சியாளா்களின் அலட்சியத்தாலும் அஜாக்கிரதையாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை போன்ற கொடுஞ்செயல்களும் வரிசை கட்டி நிற்கின்றன. கிருஷ்ணகிரியில் 13 வயது அரசுப் பள்ளி மாணவியை 3 ஆசிரியா்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு, வேலூரில் ஓடும் ரயிலில் கா்ப்பிணியை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி கீழே தள்ளிவிட்ட கொடூரம் என குற்றச் சம்பவங்கள் தொடா்கின்றன. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது.
இரண்டு நாள்களுக்கு முன்பு திருநெல்வேலியில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் முதல்வரை நேரில் சந்தித்து, வாழ்வாதார கோரிக்கைகளை கொடுப்பதற்காக மணிக்கணக்கில் காத்திருந்த சமயத்தில், அவா்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்க மனமில்லாமல் திரும்பி வந்த முதல்வரின் செய்கை கண்டனத்துக்குரியது.
இத்தகைய முதல்வரின் ஆட்சியை வீழ்த்த அனைத்துத் தரப்பு மக்களும் உறுதிபூண்டுள்ளனா். இனியாவது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுத்து சட்டம்-ஒழுங்கை காக்க வேண்டும் என்று எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.