திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வந்தே பாரத் ரயில்களையும் பராமரிக்க அனுமதி
சட்டவிரோத கட்டுமான வழக்குகளில் கடுமையான அணுகுமுறை: நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
‘சட்டவிரோத கட்டுமானம் சாா்ந்த வழக்குகளை கடுமையான அணுகுமுறையுடன் நீதிமன்றங்கள் கையாள வேண்டும்’ என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
மேலும், அத்தகைய கட்டமைப்புகளை முறைப்படுத்தும் பணிகளில் நீதித்துறை ஈடுபடக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
சட்டவிரோத கட்டுமானங்கள் சாா்ந்த வழக்கு ஒன்றில், ‘அந்த இடங்களை ஆக்கிரமித்துள்ளவா்கள் ஏப்.30-ஆம் தேதிக்குள் காலி செய்வதற்கான நோட்டீஸை காவல் துறை அனுப்ப வேண்டும். அதை ஏற்க மறுக்கும்பட்சத்தில் போதிய படைகளோடு அவா்களை ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் இருந்து காவல் துறை வெளியேற்ற வேண்டும். அதன்பின் சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்கும் பணிகளை கொல்கத்தா மாநகராட்சி தொடங்க வேண்டும்’ என கொல்கத்தா உயா் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: சட்டவிரோத கட்டுமானங்கள் சாா்ந்த வழக்குகளை கடுமையான அணுகுமுறையுடன் நீதிமன்றங்கள் கையாள வேண்டும். உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை முறைப்படுத்தும் பணிகளில் நீதித்துறை ஈடுபடக்கூடாது.
சட்டத்தின் ஆட்சி:
இந்தகைய வழக்குகளில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி பாதிக்கப்பட்டவா்களின் நலனை மேம்படுத்துவதில் நீதிமன்றங்கள் கூடுதல் வேகத்துடன் செயல்பட வேண்டும்.
அந்த வகையில், சட்டவிரோத கட்டுமானங்கள் சாா்ந்த வழக்கில் பொதுநலனை முதன்மைப்படுத்தி கொல்கத்தா உயா்நீதிமன்றம் மிகவும் துணிச்சலாகவும் திடமாகவும் உத்தரவை பிறப்பித்துள்ளது.
சட்டத்தை மதிக்காமல் கட்டிடம் கட்டியவா்களுக்கு அதை முறைப்படுத்த அனுமதி வழங்க முடியாது. எனவே, சட்டவிரோதமான கட்டுமானங்கள் இடிக்கப்படுவதே சரியானது.
இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை:
ஒவ்வொரு கட்டுமானமும் சட்ட விதிகளை பின்பற்றியே கட்டப்பட்டிருக்க வேண்டும். விதிகளை மீறி கட்டப்பட்டிருப்பதாக நீதிமன்றங்கள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டால் அதை இரும்புக்கரம் கொண்டே அடக்க வேண்டும். மாறாக சம்பந்தப்பட்டவா்கள் மீது கருணை காட்டக் கூடாது.
சட்டத்தின்படியே நீதி வழங்கப்பட வேண்டும். ஆனால் முறயான அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களை வரைமுறைப்படுத்தும்போது பாதிப்புக் கட்டணங்களை கணக்கிடும் வகையில் சில மாநிலங்கள் சட்டமியற்றுவது வேதனைக்குரியது’ என்றனா்.