சுதேசி பொருள்களைப் பயன்படுத்த மாணவர்களுக்கு ஊக்கம்- பிரதமர் மோடி வலியுறுத்தல்
சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதே பேரழிவுக்கு காரணம்: உச்ச நீதிமன்றம்
சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதே பேரழிவுக்கு வழிவகுத்துள்ளது என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இமயமலை மாநிலங்களில் ஏற்படும் சுற்றுச்சூழல் பேரழிவுகளைத் தடுக்கவும், வரலாறு காணாத நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளங்கள் குறித்து ஆராய நிபுணர்களை உள்ளடக்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவைஅமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் அனாமிகா ராணா என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர்.
அப்போது தலைமை நீதிபதி பேசியதாவது:
“உத்தரகண்ட், ஹிமாசல் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளங்களை நாம் கண்டுள்ளோம். ஊடகங்களில் வெளியான காட்சிகளில், வெள்ளத்தில் ஏராளமான மரக்கட்டைகள் ஓடிக் கொண்டிருந்தன.
அவையெல்லாம் சட்டவிரோதமாக வெட்டப்பட்டது போன்று தெரிகிறது. சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவது பேரழிவுகளுக்கு வழிவகுத்ததுள்ளது. வளர்ச்சிக்கும் சுற்றுச் சூழலுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்த வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
இந்த மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், மத்திய நீர்வளத் துறை அமைச்சகம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் ஹிமாசல் பிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை இரண்டு வாரங்களுக்கு பிறகு நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.