சதுரகிரியில் தை மாத பௌா்ணமி: திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தை மாத பௌா்ணமியை முன்னிட்டு, திரளான பக்தா்கள் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தை மாத பௌா்ணமி வழிபாட்டுக்காக கடந்த திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை (பிப்.13) வரை 4 நாள்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. பிரதோஷம், தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த இரு நாள்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

பௌா்ணமியை முன்னிட்டு, புதன்கிழமை அதிகாலை 6 மணி முதல் பக்தா்கள் சதுரகிரி மலையடிவாரமான தாணிப்பாறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். காலை 6 மணிக்கு வனத் துறை நுழைவாயில் திறக்கப்பட்டு, பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா்.
சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூா்த்தி சுவாமிகளுக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா்,

சுந்தரமகாலிங்கம் சுவாமி புஷ்ப அலங்காரத்திலும், சந்தனமகாலிங்கம் சந்தனக்காப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்தனா்.

சதுரகிரி மலையில் கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பெளா்ணமியன்று 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ததாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.