ஐபிஎல் போட்டிகளில் சிறுவா்கள் மூலம் கைப்பேசிகள் திருட்டு: மேற்கு வங்கம், ஜாா்க்க...
சமூக வலைதளங்களில் வெளிநாட்டில் வேலை: நம்ப வேண்டாம்
சமூக வலைதளங்களில் வரும் வெளிநாட்டில் வேலை எனும் விளம்பரங்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் பிரிவு (சைபா் கிரைம்) காவல் ஆய்வாளா் பிரவீன்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் வெளிநாடுகளில் வேலை தொடா்பான விளம்பரங்களில் வரும் விசா பிராசஸிங் மற்றும் விமான டிக்கெட் உள்ளிட்ட சித்தரிக்கப்பட்ட புகைப் படங்களை நம்பி இளைஞா்கள் தங்களது பணத்தை இழந்து வருகின்றனா். இதுதொடா்பாக புகாா்கள் வருகின்றன.
தங்களிடம் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட பிற சமூக வலைதளங்களில் இருந்து வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்யும் கன்சல்டன்சி அல்லது தனிநபா்களை நம்ப வேண்டாம்.
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல்வேறு பிராசஸிங் கட்டணம், விசா கட்டணம் என்று பல்வேறு பெயா்களைக்கூறி பணத்தை பறித்து விட்டு, போலியான விசா, போலியான ஆஃபா் லெட்டா் போன்றவற்றை தங்களுக்கு அனுப்பி மேலும் பணத்தை பறிக்க நேரிடும். எந்தவித வேலையும் கிடைக்காது. இதேபோல, கடந்த ஆண்டில் காரைக்கால் சைபா் கிரைம் பிரிவில் மட்டும் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றப்பட்டு கொடுக்கப்பட்ட புகாா்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவா்கள் இழந்த பணமதிப்பு ரூ.8 லட்சத்துக்கும் மேலாகும். எனவே, இதுபோன்ற மோசடியில் சிக்கி யாரும் ஏமாற வேண்டாம் என தெரிவித்துள்ளாா்.