சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் மாபெரும் போராட்டம்: அன்புமணி
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சென்னையில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதற்கான அவசர, அவசியத் தேவைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில் இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"சமூகநீதியின் தொட்டில் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டுக்கு சமூக அநீதி சக்திகளால் பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் நிலையில், அதைத் தடுக்க வேண்டிய பெரும் கடமை தமிழக அரசுக்கும், சமூகநீதி அமைப்புகளுக்கும் உள்ளன.
69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சிலர் தொடரப்பட்டுள்ள வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் எந்த நேரமும் விசாரணைக்கு வரக்கூடும். அப்போது தமிழ்நாட்டில் எந்த அடிப்படையில் 69% இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது என்பதை நிரூபிப்பதற்கான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை தமிழக அரசு தாக்கல் செய்யாவிட்டால், கடந்த பல பத்தாண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் 69% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் ஆபத்து உள்ளது.
இதைச் சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் போதிலும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு அதற்கு செவிமடுக்கவில்லை. 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை சிறிதும் இல்லாமல் சமூகநீதிக்கு எதிரான வகையில் செயல்பட்டு வரும் திமுக அரசுக்கு தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கான அவசர, அவசியத் தேவைகள் குறித்து விவாதிப்பதற்கான இந்தக் கலந்தாய்வுக் கூட்டம் அதன் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது தவிர்க்க முடியாதத் தேவை ஆகும். அதை நடத்துவதற்காக பெரும் செலவு தேவைப்படாது; தமிழக அரசு எந்திரத்தின் மனிதவளத்தைக் கொண்டே இரு மாதங்களில் இந்தக் கணக்கெடுப்பை நடத்தி விட முடியும். இந்த விஷயத்தில் பிகார், தெலங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் நமக்கு வழிகாட்டுகின்றன. சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றமோ, உயர்நீதிமன்றங்களோ எந்தத் தடையும் விதிக்கவில்லை. இத்தகைய கணக்கெடுப்பு செல்லும் என்றும் அந்த நீதிமன்றங்கள் அறிவித்துள்ளன.
இதையும் படிக்க | நிறுத்திவைத்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன்? - நீதிபதிகள் சரமாரி கேள்வி!
அதன்பிறகும் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்காததன் மூலம், சமூகநீதியில் திமுக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது.
சமூகநீதியைக் காப்பதற்கான கடமையை தமிழக அரசு செய்யத் தவறிய நிலையில், அதை சுட்டிக்காட்டி கடமையை செய்ய வைக்க வேண்டியது சமூகநீதி அமைப்புகளின் பொறுப்பாகும்.
அந்தப் பொறுப்பை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை விரைந்து நடத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி, சமூக நீதியில் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, அவற்றின் சார்பில் சென்னை மாநகரில் மாபெரும் போராட்டத்தை நடத்த பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வுக் கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது.
போராட்டத்தை எந்த நாளில் நடத்துவது என்பது குறித்து பிற அமைப்புகளிடமும் கலந்து பேசி முடிவெடுக்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.