சாம்பியன்ஸ் டிராபி: துபை திடலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?
இந்தியா, பாகிஸ்தான் உள்பட உலகின் முன்னணியின் இருக்கும் முதல் 8 கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தானின் கராச்சியில் இன்று(பிப்.19) கோலாகலமாகத் தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து மோதிவருகின்றன.
பாதுகாப்பு காரணங்களுக்கான பாகிஸ்தான் செல்லாத இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெறுகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை நாளை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்த நிலையில் துபை பன்னாட்டு கிரிக்கெட் மைதானம் யாருக்கு சாதகம் என்பதைப் பார்ப்போம்!
இந்திய அணி லீக் சுற்றில் மொத்தம் 3 போட்டிகளில் துபை மைதானத்தில் விளையாடவிருக்கிறது. துபையில் பகல் நேரங்களில் அதிகளவில் வெப்பம் மற்றும் இரவு நேரங்களில் அதிகளவில் பனிப்பொழிவு இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால் 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கே அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. பனிப் பொழிவு அதிகமாக இருப்பதால் வேகப்பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க...கராச்சி திடல் மேல் பறந்த போர் விமானங்கள்..! பதற்றமடைந்த நியூஸி. வீரர்கள், ரசிகர்கள்!
துபை பன்னாட்டு கிரிக்கெட் மைதானம் சேஸிங்க்கு சாதகமா?
குறைந்தபட்சம் 50 போட்டிகளை நடத்திய பன்னாட்டு மைதானங்களில் துபை மைதானம் இதுவரை 58 போட்டிகளை நடத்தியுள்ளது. அதில், 34 முறை சேஸிங் செய்த அணிகளே வெற்றிபெற்றுள்ளன.
வேகப்பந்து வீச்சின் சொர்க்கம்
சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச லீக் இ20 போட்டியில் துபை மைதானத்தில் 15 போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், 11 முறை சேஸிங் செய்த அணிகளே வெற்றிபெற்றுள்ளன. அதுமட்டுமின்றி இந்தத் தொடரில் 116 விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்களும், 54 விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்களும் கைப்பற்றியுள்ளனர்.
இந்த மைதானத்தால் இந்திய அணிக்கு பாதிப்பா?
இந்திய அணியில் குல்தீப் யாதவ், அக்ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட 5 சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். வேகப்பந்து வீச்சுக்கு ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா உள்ளனர். முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு மிகவும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க... சாம்பியன்ஸ் டிராபியில் தொடக்க வீரராக ஸ்டீவ் ஸ்மித்..! பாண்டிங் ஆதரவு!