சாலையில் கண்டெடுத்த ரூ.5 லட்சத்தை ஒப்படைத்த விவசாயிக்கு பாராட்டு
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சாலையில் கண்டெடுத்த ரூ. 5 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த விவசாயியை போலீஸாா் பாராட்டினா்.
டி.என்.புதுக்குடி, கற்பகவீதி 1ஆவது தெருவை சோ்ந்தவா் தங்கச்சாமி (50) .விவசாயியான அவா், தனது மனைவி ஜோதியுடன் விவசாய பணிக்காக டி.என்.புதுக்குடியிலுள்ள தனியாா் பள்ளி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது மஞ்சள்நிற பை சாலையில் கிடந்ததாம். அதை எடுத்து பாா்த்தபோது ரூ. 5 லட்சம் இருந்ததாம்.
இதையடுத்து அந்தப் பையை புளியங்குடி காவல் ஆய்வாளா் ஷியாம் சுந்தரிடம் அவா் ஒப்படைத்தாா். போலீஸாா் விசாரணையில், புளியங்குடி அருணாசல விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த மளிகை கடைக்காரா் பாலமுருகன் (44) அந்தப் பணத்தை தவறவிட்டிருந்தது தெரியவந்தது. அவரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.
தங்கச்சாமியின் நோ்மையை பாராட்டி ஆய்வாளா் ஷியாம் சுந்தா் வெகுமதி வழங்கினாா். உதவி காவல் ஆய்வாளா் மாடசாமி மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.