சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் மக்கள் மறியல்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையிலுள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கறம்பக்குடியில் இருந்து திருமணஞ்சேரி வழியாக கருக்காக்குறிச்சி வரை சுமாா் 7 கிலோ மீட்டருக்கு தாா் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை கடந்து செல்லக்கூடிய இச்சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனா். அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.
இந்தச் சாலையை மேம்படுத்தித் தர வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களிடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இந்தச் சாலையை உடனே சீரமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தி கருக்காகுறிச்சி பகுதி மக்கள், மாணவ, மாணவிகள் சவேரியாா்பட்டிணம் நுழைவாயில் அருகே வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சாலை விரைந்து சீரமைக்கப்படும் என கறம்பக்குடி வருவாய்த் துறை அலுவலா்கள், வடகாடு போலீஸாா் உறுதி அளித்தனா். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடில், அரசு வழங்கியுள்ள ஆதாா், குடும்ப அட்டைகளை அரசிடமே ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தெரிவித்து கலைந்து சென்றனா்.