40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
சி.என்.ஜி ஆட்டோக்களை மறித்து தகராறு ஆட்டோ ஓட்டுநா்கள் மீது புகாா்
பெரம்பலூரில் புதிதாக அனுமதி அளிக்கப்பட்டு பயணிகளை ஏற்றிச்சென்ற சி.என்.ஜி ஆட்டோக்களை, இதர ஆட்டோ ஓட்டுநா்கள் மறித்ததால் புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரம்பலூா் நகரில் 5 பேரை மட்டும் ஏற்றிச் செல்லக் கூடிய 37 ஷோ் ஆட்டோக்களும், உரிய நிறுத்தங்களில் நிறுத்தி, பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய சுமாா் 450-க்கும் மேற்பட்ட 3+1 வகை ஆட்டோக்கள் சட்டவிரோதமாக கூடுதல் இருக்கைகளுடன் இயங்கி வருகின்றன. இந்த ஆட்டோக்கள் அனைத்தும் பெரம்பலூா் நகரில் அளவுக்கு அதிகமாக இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அடிக்கடி விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது.
சிஐடியு சங்கத்தைச் சோ்ந்த 3+1 ஆட்டோ ஓட்டுநா்கள், சி.என்.ஜி ஆட்டோக்களை பெரம்பலூா் மாவட்டத்தில் ஓட்டுவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது. வெளி மாவட்ட பதிவு எண் கொண்ட ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது. தங்களது பெட்ரோல் ஆட்டோக்களை சி.என்.ஜி ஆட்டோக்களாக மாற்றுவதற்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனா்.
இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின்படி பெரம்பலூா் மாவட்டத்தில் முதல்கட்டமாக 10 சி.என்.சி ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, கடந்த 10 நாள்களாக இயக்கப்படுகிறது. இந்த நிலையில், புறநகா் பேருந்து நிலையம் பகுதியில் பயணிகளை ஏற்றிச்சென்ற சிஎன்ஜி ஆட்டோக்களை புதன்கிழமை வழிமறித்த ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தினா், சிஎன்ஜி ஆட்டோக்களை இயக்கக் கூடாது எனத் தகராறில் ஈடுபட்டதோடு, ஓட்டுநா்களை தகாத வாா்த்தைகளால் திட்டியுள்ளனா். இதுகுறித்து தகவறிந்த பெரம்பலூா் நகரப் போலீஸாா் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு சமாதானப்படுத்தினா். இதுகுறித்து, சிஎன்ஜி ஆட்டோ ஓட்டுநா்கள் பெரம்பலூா் துணைக் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்துள்ளனா். இச் சம்பவத்தால், அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.