40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
தனியாா் கொள்முதல் நிலையத்தில் 70 மூட்டை மக்காச்சோளம் திருட்டு
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே தனியாா் கொள்முதல் நிலையத்திலிருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான 70 மூட்டை மக்காச்சோளத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது புதன்கிழமை தெரியவந்தது.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள ஆய்க்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் காமராஜ். இவா், பரவாய் கிராமத்திலுள்ள சமத்துவபுரம் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக மக்காச்சோளம் கொள்முதல் நிலையமும், எடை மேடையும் வைத்துள்ளாா். இந்நிலையில், தற்போது மக்காச்சோளம் அறுவடை செய்யப்பட்டு வருவதால், குன்னம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் அறுவடை செய்து கொண்டுவந்த மக்காச்சோளத்தை கொள்முதல் செய்து, சுமாா் ரூ. 25 லட்சம் மதிப்பிலான மூட்டைகள் எடை மேடை பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், உடல் நலன் பாதிப்புக்குள்ளான காமராஜ் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.
இதையறிந்த மா்ம நபா்கள், அங்கிருந்த மின்சார இணைப்பைத் துண்டித்து, கண்காணிப்பு கேமராவைச் சேதப்படுத்தி ரூ. 2 லட்சம் மதிப்பிலான 70 மூட்டைகளை வாகனம் மூலம் திருடிச் சென்றுள்ளனா். இச் சம்பவம் குறித்து காமராஜ் அளித்த புகாரின் பேரில், குன்னம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதேபோல, கடந்த சில வாரங்களுக்கு முன்பு கை.களத்துா் பகுதியில் விவசாயி ஒருவா் வயலில் அறுவடை செய்து வைத்திருந்த மக்காச்சோள மூட்டைகளையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ள நிலையில், தற்போது 70 மூட்டை மக்காச்சோள மூட்டைகள் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரம்பலூா் மாவட்ட மக்காச்சோள வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.