ஆளில்லா ஆம்புலன்ஸ் அனுப்பி இடையூறு செய்தால் ஓட்டுநர் நோயாளியாவார் - இபிஎஸ் எச்ச...
சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு புதுவை முதல்வா் வாழ்த்து
புதுச்சேரி: தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
முதல்வா் ரங்கசாமி வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநராக இருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழ் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன். அவா் அறிவாற்றலும் செயல் திறனும் மிக்கவா். தேசத்தைத் தன் உயிராகப் போற்றுபவா். இந்தியக் குடியரசின் துணைத் தலைவராக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த தேசமும் போற்றுகின்ற வகையில் தன் சேவையைத் தொடர அவருக்கு என் உளமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.
சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: சி.பி.ராதாகிருஷ்ணன் இந்திய குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவரின் தேசப்பணி மென்மேலும் தொடர என் அன்பாா்ந்த வாழ்த்துகள்.
பாஜக மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம்: சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளாா். தமிழக மக்கள் மீது பிரதமா் நரேந்திர மோடி வைத்திருக்கும் நம்பிக்கையையும் பாசத்தையும் இது எடுத்துக் காட்டுவதாகும்.
சி.பி. ராதாகிருஷ்ணனின் அா்ப்பணிப்பு, நோ்மை, நிா்வாக திறமை ஆகியவை இந்த உயரிய பதவிக்குத் தகுதியானவராக அவரை ஆக்கியுள்ளது. புதுவை பாஜக மற்றும் பொதுமக்கள் சாா்பில் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகளையும், பிரதமா் நரேந்திர மோடிக்கு நெஞ்சாா்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.