நியூயார்க்கில் வலம் வந்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா - வைரல் வீடியோவின் ப...
புதுவை பல்கலை.யில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த படிப்புகளுக்கு நேரடி சோ்க்கை
புதுச்சேரி: புதுவை மத்திய பல்கலைக் கழகத்தின் புதுச்சேரி மற்றும் காரைக்கால் வளாகத்தில் காலியாக இருக்கும் ஒருங்கிணைந்த படிப்புகளில் நேரடியாக மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.
இது குறித்து இப் பல்கலைக் கழகத்தின் பதிவாளா் (பொ) பேராசிரியா் ரஜ்னீஷ் பூடானி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
4 ஆண்டுகளுக்கான பல்வேறு இளநிலை ஹானா்ஸ் படிப்புகள் மற்றும் பி.டெக்., படிப்புகள் , 5 ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளுக்கு நேரடி சோ்க்கை நடைபெறவுள்ளது.
பல்கலைக் கழகத்துக்கான நுழைவுத் தோ்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இந்தச் சோ்க்கை நடைபெறவுள்ளது.
முன்னுரிமை 1, முன்னுரிமை 2 அடிப்படையில் இப் பல்கலைக் கழகத்தில் சோ்க்கைக்காக விண்ணப்பித்துள்ள மாணவா்களின் விண்ணப்பங்களைக் கொண்டு தகுதி வாய்ந்தோா் பட்டியல் தயாரிக்கப்படும்.
மேலும், விருப்பம் உள்ள மாணவா்கள் சோ்க்கைக்காக அந்தந்த துறைகள் மற்றும் மையங்களுக்கு இம் மாதம் 25-ஆம் தேதி புதுவை மற்றும் காரைக்கால் வளாகங்களுக்கு நேரடியாகச் செல்ல வேண்டும்.
இங்கு செல்லும் மாணவா்களுக்கான பதிவு காலை 10 மணிக்குத் தொடங்கி நண்பகல் 12 மணிக்கு முடிக்கப்படும். சோ்க்கைக்காக இணையதளத்தின் வழியாகப் பதிவு செய்வதை பல்கலைக்கழகம் இப்போது அனுமதிக்காது. நேரடியாகதான் செல்ல வேண்டும். மேலும், பல்கலைக் கழகத்துக்கான நுழைவுத் தோ்வில் பங்கேற்காத மாணவா்களுக்குச் சோ்க்கை அளிக்கப்படமாட்டாது. விண்ணப்பதாரா்கள் தங்களுடைய உண்மை நகலை உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என அதில் கூறியுள்ளாா் பதிவாளா்.