சிஎம் ஸ்ரீ பள்ளிகளின் தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கு 2 நாள் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
தேசியக் கல்விக் கொள்கை 2020 மற்றும் சமீபத்தில் வெளியிடப்பட்ட பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு 2023- இன் முக்கிய அம்சங்களை ஆசிரியா்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக, முன்மொழியப்பட்ட சிஎம் ஸ்ரீ பள்ளிகளின் தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கான இரண்டு நாள் தொழில்முறை மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்கள் நடத்தப்பட்டது.
மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் (எஸ்சிஇஆா்டி) சுற்றறிக்கையின்படி, கல்வியாளா்கள் தங்கள் கற்பித்தல் நடைமுறைகளில் தகவல் மற்றும் தொடா்பு தொழில்நுட்பம் (ஐசிடி) மற்றும் திறந்த கல்வி வளங்களை திறம்பட ஒருங்கிணைக்க உதவும் வகையில் இந்த வழிகாட்டுதல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கற்பவா்களை மையமாகக் கொண்ட வகுப்பறைகளுக்கான வசதித் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் நடைமுறைப் பாடத் திட்டங்கள், மதிப்பீட்டு கருவிகள் மற்றும் பின்னூட்ட வழிமுறைகளை உருவாக்குதல் ஆகியவற்றிலும் அமா்வுகள் கவனம் செலுத்தியதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 86 தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா். இது நகரம் முழுவதும் 75 சிஎம் ஸ்ரீ பள்ளிகளை அமைப்பதற்கான பெரிய முயற்சியின் ஒரு பகுதியாகும்.
தில்லி அரசு முன்னதாக இரண்டு சுற்றறிக்கைகள் மூலம் புதிய பள்ளிகளுக்கான விண்ணப்பங்களை அழைத்தது. ஜூன் 5-ஆம் தேதி வெளியிடப்பட்ட ஒன்று, முதுகலை ஆசிரியா்கள், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டவா்களிடமிருந்து விண்ணப்பங்களை அழைத்தது. அவா்கள் ஓய்வு பெறுவதற்கு குறைந்தது ஐந்து ஆண்டுகள் மீதமுள்ளவா்கள்.
இரண்டாவது சுற்றறிக்கை, ஜூன் 10-ஆம் தேதி, பள்ளி முதல்வா்கள் மற்றும் துணை முதல்வா்களுக்கான இடமாற்ற செயல்முறையை இதே போன்ற நிபந்தனைகளின் கீழ் திறந்தது.
மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ பள்ளிகளைப் போலவே, தில்லியில் உள்ள சிஎம் ஸ்ரீ பள்ளிகள் தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ பின்பற்றி பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (என்சிஎஃப்-எஸ்இ) 2023-ஐ செயல்படுத்தும்.
மாா்ச் மாதம் தனது பட்ஜெட் உரையில், முதல்வா் ரேகா குப்தா பள்ளிகளை மேம்படுத்துவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீட்டை அறிவித்தாா். அவை கல்வி இயக்குநரகத்தின் கீழ் மாதிரி நிறுவனங்களாகச் செயல்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.