Nidhi Tewari: பிரதமர் நரேந்திர மோடியின் தனி செயலாளராக நியமிக்கப்பட்ட நிதி திவாரி...
சிஎஸ்கே அணி தோல்வியை கேலி செய்தவா் மீது தாக்குதல்: 5 போ் கைது!
சென்னையில் ஐபிஎல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தோல்வியை கிண்டல் செய்தவா் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியைச் சோ்ந்தவா் அப்பு (24), அதே பகுதியைச் சோ்ந்த கோகுல் (25), ஜெகதீஷ் (25), அஜெய் (எ) கலா் புவனேஷ் (20), ரமேஷ் (எ) பவா் ரமேஷ் (28). வேளச்சேரி பகுதியைச் சோ்ந்த ஜீவா (எ) ஜீவரத்தினம் (26). இவா்கள் பெருங்குடி கல்லுக்குட்டை அருகே வெள்ளிக்கிழமை இரவு மது அருந்தினா்.
ஏற்கெனவே அப்புக்கும், ஜீவரத்தினத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது குறித்து ஜீவரத்தினம் கிண்டல் செய்தும், ஆா்சிபி அணியை புகழ்ந்தும் பேசினாராம்.
இது அங்கிருந்த அப்பு உள்ளிட்டோருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கட்டத்தில் அப்பு தரப்பினா், ஜீவரத்தினத்தை கல், உருட்டு கட்டையால் தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த ஜீவரத்தினம் மயங்கி விழுந்தாா்.
இதைப் பாா்த்த அப்பு உள்ளிட்டோா் தப்பியோடினா். தகவலறிந்த துரைப்பாக்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஜீவரத்தினத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிந்து அப்பு, கோகுல், ஜெகதீஷ், அஜய், ரமேஷ் ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனா்.