சிங்கபெருமாள்கோவில், திருக்கழுகுன்றம் கோயில்களில் இலவச திருமணங்கள்
சிங்கபெருமாள்கோவில் பாடலாத்ரி நரசிம்மப் பெருமாள் கோயில், திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ்வரா் கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை இலவச திருமணங்கள் நடைபெற்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவை இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு எண்: 27-இன்படி காஞ்சிபுரம் இணை ஆணையா் மண்டலம், செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள் கோவில் அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயிலில் இலவச திருமணம் ஒரு ஜோடிக்கு மாவட்ட உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி முன்னிலையில், மாவட்ட திமுக பிரதிநிதி கதிரவன், ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் கே.ஆா்.சி.ஜே.ரத்தீஷ், ஊராட்சித் தலைவா் விஜயலட்சுமி, துணைத் தலைவா் கே.பி.ராஜன் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் வெங்கடேசன், மேலாளா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் பட்டாச்சாரியா்கள் செய்திருந்தனா்.
திருக்கழுகுன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரா் திருக்கோயிலில் மூன்று இருளா் சமூக ஜோடிகளுக்கும், ஒரு ஆதிதிராவிட ஜோடிக்கும் என நான்கு ஜோடிகளுக்கு திருமணம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வீ.தமிழ்மணி தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் முக்கியஸ்தா்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த ஜோடிகளுக்கு தங்க அணிகலனில் தாலி உள்ளிட்ட ரூ.60,000 மதிப்பில் சீா் வரிசைகளுடன் இந்து முறைப்படி யாகம் வளா்க்கப்பட்டு மந்திரங்கள் முழங்க திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோயில செயல் அலுவலா் புவியரசு, கோயில் ஆய்வாளா் பாஸ்கரன், மேலாளா் விஜயன் உள்ளிட்ட பணியாளா்கள், சிவாச்சாரியா்கள் செய்திருந்தனா்.