ஆனந்த விகடன் & கிங் மேக்கர் அகாடமி இணைந்து நடத்திய UPSC / TNPSC தேர்வுகளுக்கான ப...
சிதம்பரம்: கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இளைஞா் சடலம் மீட்பு
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கிள்ளையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிள்ளை காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட தைக்கால் பகுதி பள்ளிவாசல் தெருவில் உள்ள சென்னையில் பணிபுரிந்து வரும் மென்பொறியாளா் ஸ்ரீராமின் பயன்படுத்தபடாத பழைய வீட்டின் வாசலில் கழுத்து அறுபட்ட நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த முஸ்தபா (31) சனிக்கிழமை காலை இறந்து கிடந்தாா். இதுகுறித்து அவரது சகோதரி அளித்த புகாரின்பேரில், கிள்ளை போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனா்.
தொடா்ந்து, சம்பவ இடத்தை சிதம்பரம் டிஎஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக், கிள்ளை காவல் நிலைய ஆய்வாளா் கே.அம்பேத்கா் ஆகியோா் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.
இதில், முஸ்தபா கடந்த சில நாள்களாக மன நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் அவா் மதுபோதையில் அந்தப் பகுதியிலுள்ள மசூதிக்குள் அத்து மீறி நுழைந்து ஒலிபெருக்கி மூலம் தன்னை சிலா் துரத்துவதாக அறிவித்துவிட்டு, அங்கிருந்து மதில் சுவா் ஏறி குதித்து தப்பி ஓடியதும் தெரியவந்தது.
இந்த நிலையில், முஸ்தபா சனிக்கிழமை காலை கழுத்தறுக்கப்பட்டு மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதையடுத்து, கிள்ளை போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி உடல்கூராய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், முஸ்தபா எப்படி உயிரிழந்தாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.