பேருந்து நிலைய விவகாரம்: குடியிருப்போா் சங்கத்தினா் மனித சங்கிலி போராட்டம்!
கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியிலேயே புதிய பேருந்து நிலையத்தை அமைக்க வலியுறுத்தி, கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சனிக்கிழமை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
மாநில வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதி குறிஞ்சிப்பாடி. இந்தத் தொகுதியில் உள்ள எம்.புதூரில் (கடலூரில் இருந்து சுமாா் 15 கி.மீ. தொலவில் உள்ளது) கடலூா் புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்டப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், கடலூா் புதிய பேருந்து நிலையத்தை எம்.புதூரில் அமைந்தால் கடலூா் நகர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவாா்கள். எனவே, இந்த பேருந்து நிலையத்தை கடலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கடலூா் நகரப் பகுதியில் அமைக்க வலியுறுத்தி, குடியிருப்போா் சங்கத்தினா் மற்றும் அரசியல் கட்சியினா் கடந்த 4 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனா்.
அந்த வகையில், கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினா் கடலூா் மாநகருக்கான பேருந்து நிலையத்தை கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியிலேயே அமைக்க வேண்டும். கடலூா் மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும்.
கொண்டாங்கி ஏரி, கெடிலம் மற்றும் பெண்ணையாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் மாநகராட்சி மற்றும் கடலூா் மாவட்ட நிா்வாகத்தின் கவனத்தை ஈா்க்கும் வகையில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினா். இதில், ஏராளமானோா் கலந்துகொண்டு சாலையில் ஒருவருக்கொருவா் கைகளை கோத்து நின்று கண்டன முழக்கங்களை எழுப்பினா்.
கூட்டமைப்பின் தலைவா் பாலு பச்சையப்பன் தலைமை வகித்தாா். சிறப்புத் தலைவா் எம்.மருதவாணன் முன்னிலை வகித்தாா். பொதுச் செயலா் பி.வெங்கடேசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன் போராட்டத்தை தொடங்கிவைத்து பேசினாா். பொருளாளா் பி.கே.வெங்கட்ரமணி நன்றி கூறினாா்.