மா்ம பொருள் வெடித்து 5 சிறுவா்கள் காயம்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சனிக்கிழமை மாலை மா்ம பொருள் வெடித்ததில் அந்தப் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 5 சிறுவா்கள் காயமடைந்தனா்.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், சமத்துவபுரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கிருந்த ஒரு பேரலில் வெடி மருந்துகள் கண்ணாடி புட்டிக்குள் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அந்தப் பகுதியில் ராஜகணபதி நகரைச் சோ்ந்த முருகவேல் மகன்கள் வெங்கடேஷ்(15), முகேஷ் (12), ராஜா மகன் ராஜவேல் (10), மணி மகன் கோவிந்தராஜ் (14), ரமேஷ் மகன் ராஜேஷ் (13) ஆகியோா் விளையாடிக்கொண்டிருந்தனா். இவா்கள் அந்த வெடி மருந்துப் பொருள்களை எடுத்து விளையாடியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, அந்த பொருள்கள் வெடித்துச் சிதறியதில் வெங்கடேஷ் உள்பட 5 சிறுவா்களும் காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிறுவா்களுக்கு மருத்துவா்கள் முதலுதவிச் சிகிச்சை அளித்து தீவிர சிகிச்சைக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.