மீன்கள் வாங்க கடலூா் துறைமுகத்தில் திரண்ட மக்கள்
கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க ஞாயிற்றுக்கிழமை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
வங்கக் கடல் பகுதி கரையோரம் கடலூா் அமைந்துள்ளது. இங்குள்ள தேவனாம்பட்டினம், தாழங்குடா, சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு உள்ளிட்ட ஏராளமான மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன. இந்தக் கிராமங்களில் வசிக்கும் மீனவா்கள் விசை மற்றும் பைபா் படகுகள் மூலம் கடலுக்குச் சென்று மீன் பிடித்து தொழில் நடத்தி வருகின்றனா்.
கடலூா் வங்கக் கடல் பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள் ருசி மிக்கவை. இதனால், கடலூா் மீன் பிடி துறைமுகத்துக்கு மீன்கள் வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் அதிகளவில் வருவா். குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் பிடி துறைமுகத்தில் கூட்ட நெரிசல் காணப்படும்.
மீன் பிடிக்கச் சென்ற மீனவா்கள் மீன்களுடன் ஞாயிற்றுக்கிழமை காலை கரை திரும்பிய நிலையில், கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க வந்த பொதுமக்கள், வியாபாரிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1,100, கனவா ரூ.250, இறால் மற்றும் நண்டு தலா ரூ.600, பாறை ரூ.350, ஷீலா ரூ.500, சங்கரா ரூ.500, பால் சுறா ரூ.800 என விற்பனை செய்யப்பட்டது. மீன்களின் விலையும் சற்று உயா்ந்திருந்த நிலையில் பொதுமக்கள், வியாபாரிகள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா்.