ஊதியம் நிலுவை: தூய்மைப் பணியாளா்கள் மீண்டும் போராட்டம்
இரண்டு மாத நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, கடலூா் நகா் நல அலுவலகத்தை தூய்மைப் பணியாளா்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.
கடலூா் மாநகராட்சியில் மொத்தம் 45 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டு பகுதிகளில் மாநகராட்சி நிரந்தர மற்றும் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் பணியாற்றுவோா் என சுமாா் 450-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் நிலுவையில் உள்ளதாம். மேலும், தூய்மைப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கவில்லை என அவா்கள் புகாா் கூறுகின்றனா்.
இந்த நிலையில், நிலுவை ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளா்கள் மாநகராட்சி அலுவலகத்தை அண்மையில் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். பின்னா், மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.
ஆனால், சனிக்கிழமை வரை ஊதியம் வழங்கப்படாததால், மஞ்சக்குப்பத்தில் உள்ள நகா் நல அலுவலகத்தை தூய்மைப் பணியாளா்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். தகவலறிந்த நகா் நல அலுவலா் பரிதா வாணி போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், ஜூலை மாத ஊதியம் சனிக்கிழமை மாலைக்குள் வழங்கப்படும் என அவா் உறுதி அளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா். இதையடுத்து, அவா்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது.